அரைசதம் விளாசினார் ரோகித்: மும்பை அணி ரன் குவிப்பு | செப்டம்பர் 23, 2020

தினமலர்  தினமலர்
அரைசதம் விளாசினார் ரோகித்: மும்பை அணி ரன் குவிப்பு | செப்டம்பர் 23, 2020

அபுதாபி: கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் கடந்து கைகொடுக்க மும்பை அணி 20 ஓவரில் 195 ரன்கள் குவித்தது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது.  அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் மும்பை, கோல்கட்டா அணிகள் மோதின. மும்பை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

ரோகித் அபாரம்: மும்பை அணிக்கு குயின்டன் டி காக், கேப்டன் ரோகித் சர்மா துவக்கம் தந்தனர். சந்தீப் வாரியர் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித், தனது ரன் கணக்கை துவக்கினார். ஷிவம் மாவி பந்தில் குயின்டன் (1) அவுட்டானார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், வாரியர் வீசிய 3வது ஓவரில் 4 பவுண்டரி விளாசினார். கம்மின்ஸ் வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட ரோகித், ஆன்ட்ரி ரசல் வீசிய 6வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்த போது சூர்யகுமார் (47 ரன், 6 பவுண்டரி) ‘ரன்–அவுட்’ ஆனார்.

ஹர்திக் ஏமாற்றம்: பொறுப்பாக ஆடிய ரோகித் அரைசதமடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த சவுரப் திவாரி, கம்மின்ஸ் வீசிய 15வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்த போது சுனில் நரைன் ‘சுழலில்’ திவாரி (21) சிக்கினார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா, கம்மின்ஸ் வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். மாவி பந்தில் ரோகித் (80 ரன், 6 சிக்சர்) அவுட்டானார். ஹர்திக் (18) ‘ஹிட் விக்கெட்’ ஆனார்.

மும்பை அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. போலார்டு (13), குர்னால் (1) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் ஷிவம் மாவி 2 விக்கெட் வீழ்த்தினார்.

 

அபாரமாக ஆடிய மும்பையின் ரோகித் சர்மா, தனது 37வது அரைசதமடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் அதிக அரைசதமடித்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை ஷிகர் தவானுடன் (டில்லி, 37 அரைசதம்) பகிர்ந்து கொண்டார்.

முதலிரண்டு இடங்களில் முறையே ஐதராபாத்தின் வார்னர் (44 அரைசதம்), சென்னையின் ரெய்னா (38) உள்ளனர்.

 

200 சிக்சர்

குல்தீப் வீசிய 14வது ஓவரின் 4வது பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித், ஐ.பி.எல்., அரங்கில் தனது 200வது சிக்சரை பதிவு செய்தார். இவர், இதுவரை 190 போட்டியில் 200 சிக்சர் விளாசி உள்ளார். தவிர இவர், அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் முறையே கெய்ல் (326 சிக்சர்), டிவிலியர்ஸ் (214), தோனி (212) உள்ளனர்.

 

தேவை 10 ரன்

ரோகித் சர்மா இன்னும் 10 ரன் எடுக்கும் பட்சத்தில், ஐ.பி.எல்., அரங்கில் 5000 ரன்களை எட்டிய 3வது வீரராகலாம். இதுவரை 190 போட்டியில், 4990 ரன்கள் எடுத்துள்ளார். முதலிரண்டு இடங்களில் கோஹ்லி (5426 ரன்கள்), ரெய்னா (5368) உள்ளனர்.

மூலக்கதை